550 பேருக்கு ரூ.273.35 கோடியில் வீட்டு மனைப் பட்டா: அமைச்சர் வழங்கினார்
By DIN | Published On : 04th January 2019 01:46 AM | Last Updated : 04th January 2019 01:46 AM | அ+அ அ- |

ஆவடி பகுதியில் 550 பயனாளிகளுக்கு ரூ.273.35 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வியாழக்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், மறு கட்டுமானப் பணி கோட்டம் சார்பாக ஆவடி, திருவேற்காடு பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணிகளுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஆவடி அருகே தண்டுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிப் பேசியது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், நிலவரித் திட்டம் மூலம் ஆவடி நகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிலவரித் திட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை இத்திட்டம் மூலம் ஆவடியைச் சேர்ந்த 11,005 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் இந்த நிகழ்ச்சி மூலம் 550 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
இதில் அம்பத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் வி.அலெக்சாண்டர், திருவள்ளூர் சார் ஆட்சியர் டி.ரத்னா, தனி வட்டாட்சியர் (நகர நிலவரித் திட்டம்) வே.ஸ்ரீதரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.