நகைக்கடை ஷட்டரை உடைத்து 38 சவரன் நகை திருட்டு
By DIN | Published On : 07th January 2019 01:28 AM | Last Updated : 07th January 2019 01:28 AM | அ+அ அ- |

திருவள்ளூரில் நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 38 சவரன் நகை, ரூ.4 லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் பீக்கம் சந்த்(60). அவர் கொண்டமாபுரம் காய்கறி சந்தைத் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையைப் பூட்டிவிட்டு வீடு திரும்பினார்.
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தார். அப்போது, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று இரும்புப் பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 38 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மதிப்பிலான வைரம், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் திருவள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கூடுதல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சார்பு ஆய்வாளர் ராக்கிகுமாரி உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு கொண்டுவரப்பட்ட மோப்ப நாய், நகைக்கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைகள் தோறும் விசாரணை: இந்த திருட்டுச் சம்பவம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன், ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீஸார் ஒவ்வொரு கடைக்கும் சென்று கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் விவரங்களைக் கேட்டறிந்தனர். அப்போது இரவு நேரங்களில் கடைகள் மூடியதும் கண்காணிப்பு கேமராக்களை கடைக்காரர்கள் நிறுத்தி விட்டது தெரிய வந்தது. அதனால், அப்பகுதியில் உள்ள நகைக்கடைகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸார் வலியுறுத்தினர்.
இப்பகுதியில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் சரியாக எரியாத நிலை உள்ளது. இருட்டையும், கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததையும் மர்ம நபர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நகைக்கடையின் ஷட்டரை உடைத்து திருடிச் சென்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.