உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 09th June 2019 12:58 AM | Last Updated : 09th June 2019 12:58 AM | அ+அ அ- |

திருவள்ளூரில் உணவுப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பாதுகாப்பான உணவு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சர்வதேச சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாட தீர்மானித்துள்ளது. அதன்படி பாதுகாப்பான உணவை உட்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்பு வார விழாவை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், நிகேதன் பள்ளி வளாகத்தில் உணவுப் பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லோகநாயகி தலைமை வகித்துப் பேசுகையில், உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், நுகர்வோர் வணிகர்கள் ஆகியோர் அறிந்து கொள்ளும் வகையில் 15 நாள்கள் வரை அனுசரிக்கப்பட உள்ளது என்றார்.
பின்னர், உணவுப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து, அவர் முன்னிலையில் உணவுப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கவிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.