டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
By DIN | Published On : 09th June 2019 12:09 AM | Last Updated : 09th June 2019 12:09 AM | அ+அ அ- |

பொன்னேரி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர்.
மனுவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி-பெரும்பேடு சாலையில் உள்ள தேவரஞ்சேரி கிராமம் அருகே புதிதாக அரசு மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியே நடந்து செல்லும் பெண்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. ஏற்கெனவே இந்த மதுக் கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி சின்னக்காவனம் கூட்டுச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது இந்த மதுக் கடையைத் திறக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அதை மீறி இப்பகுதியில் கடந்த மே 31-ஆம் தேதி டாஸ்மாக் கடையை அதிகாரிகள் திறந்துள்ளனர். இக்கடையை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.