பள்ளியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி
By DIN | Published On : 14th June 2019 07:10 AM | Last Updated : 14th June 2019 07:10 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்பேரிடர் விழிப்புணர்வுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்து, பேரிடர் மேலாண்மைப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். பள்ளித் தாளாளர் பழனி, கல்விக் குழுமத்தின் இயக்குநர் தமிழரசன், பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம், துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ், தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கே.ராமலிங்கம் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் பங்கேற்றனர். தொடர்ந்து, தீ விபத்தின் வகைகள், தீ விபத்துகளைத் தடுப்பது குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து தீயை அணைக்கும் முறை, விபத்துகள், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.