75 ஆண்டுகள் நிறைவடைந்தும் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படாத பூண்டி ஏரி

சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட பூண்டி நீர்த்தேக்கம் ஜூன் 14-ஆம் தேதியோடு 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளை
பூண்டி நீர்த்தேக்கத்தின் மதகு பகுதி.
பூண்டி நீர்த்தேக்கத்தின் மதகு பகுதி.


சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட பூண்டி நீர்த்தேக்கம் ஜூன் 14-ஆம் தேதியோடு 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த ஏரிப் பகுதியை  மாற்ற வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி நீர்த்தேக்கம், சென்னை வாழ் மக்களின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரூ. 65 லட்சத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஜூன் 14-ஆம் தேதி இந்த நீர்த் தேக்கம் 75-ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது.
ரூ.65 லட்சத்தில்...: திருவள்ளூரில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ள பூண்டியில் நீர்த்தேக்கம் அமைப்பது தொடர்பான கோரிக்கை கடந்த 1900-ஆம் ஆண்டு முதலே எழுந்தது. ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்தியது தீரர் சத்தியமூர்த்தி. சென்னையில் கடந்த, 1939- இல் போதிய மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியதோடு கடும் பஞ்சத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். 
பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக, அப்போது சென்னையின் மேயராக இருந்த சத்தியமூர்த்தி, சென்னையில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் மத்தியில், பூண்டி பகுதியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்தார். இந்த திட்டத்திற்கு அப்போதைய ஆங்கிலேய அரசு எளிதாக அனுமதி அளிக்கவில்லை. இதனால் அந்த அரசிடம் கடுமையாகப் போராடியதோடு, நிலைமையை எடுத்துரைத்து அனுமதியைப் பெற்றார் சத்தியமூர்த்தி. நீர்த்தேக்கத்தை அமைக்க ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1944, ஜூன் 14-இல் அணை திறப்பு: இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு 1940 ஆகஸ்ட் 4-இல் மேயர் சத்தியமூர்த்தி தலைமையில், சென்னை மாகாண ஆளுநர் சர் ஆர்தர் ஹோப் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளாக நீர்த்தேக்கம் கட்டும் பணி முடிந்து, 1944, ஜூன் 14-இல், தொடங்கி வைக்கப்பட்டது. 
எனினும், அணை கட்டுவதற்கு தீவிரமாக உழைத்த தீரர் சத்தியமூர்த்தி அப்போது உயிருடன் இல்லை. அதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே 1943-இல் உயிரிழந்தார். 
அவர் இந்த நீர்த்தேக்கத்தை அமைக்க தீவிரமாகப் பாடுபட்டதால், அதற்கு அவரது பெயரைச் சூட்ட காங்கிரஸ் பிரமுகர்கள், ஆங்கிலேய அரசை வலியுறுத்தினர். எனினும், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக காமராஜரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தீரர் சத்தியமூர்த்தியின் பெயரைச் சூட்ட சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் 1948-இல் தீர்மானம் கொண்டுவர காமராஜர் ஏற்பாடு செய்தார். 
பின்னர், அவர் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற பின் 1954-இல் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு, சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் என்ற பெயரைச் சூட்டினார். இப்பெயர் பொறிக்கப்பட்ட அழகிய கிரானைட் ஸ்தூபி, பூண்டி நீர்த்தேக்கக் கரையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவைக்காக முதலில் அமைக்கப்பட்டது பூண்டி நீர்த்தேக்கம்தான். அதைத் தொடர்ந்தே புழல், சோழவரம் ஏரிகள், நகரின் குடிநீர்த் தேவைக்காக உருவாக்கப்பட்டன.
பூண்டி நீர்த்தேக்கம் அமைப்பதற்காக....: பூண்டி நீர்த்தேக்கம், கொசஸ்தலை ஆற்றின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்காக இங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அகற்றப்பட்டன. மேலும், நீர்த்தேக்கத்துக்கு நடுவில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊன்றீஸ்வரர் கோயிலும் அகற்றப்பட்டு கரையோரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அணையில் நீர் வற்றும்போது பழைமையான ஊன்றீஸ்வரர் கோயிலைக் காணலாம். 
நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி. பரப்பளவு 121 சதுர கி.மீ. ஆகும். பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால், உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணை கட்டியதிலிருந்து 4 முறை மட்டுமே உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் மூலம் சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். 
சீரமைக்கக் கோரிக்கை: வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் தான் இப்பகுதி மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள பூங்காவில் பெரியோர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் விளையாட்டு ஊஞ்சல்கள், அமரும் இருக்கைகள் போன்றவை உள்ளன. இதற்கு முன்பு வரை இங்கு நாள்தோறும் 500 முதல் ஆயிரம் பேர் பார்த்துவிட்டுச் சென்றனர். எனினும், இப்பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
 அதனால், இனி வருங்காலத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடிப்படை வசதிகள் மற்றும் சேதமடைந்த பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். இதுபோன்று செய்வதன் மூலம் வருங்காலத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
பழங்கால அருங்காட்சியகம்: பூண்டியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்காக இப்பகுதியைத் தோண்டியபோது கிடைத்த பழங்காலப் பொருள்களைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் ஆராய்ச்சிக்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து செல்கின்றனர். 
 இந்த அருங்காட்சியகத்தில் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு  முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்களால் ஆன ஆயுதங்கள் மற்றும் முதுமக்கள் தாழி போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பூண்டிக்கு அருகிலுள்ள கொசஸ்தலை ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியிலும், அதையடுத்துள்ள அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இதைக் கருத்தில்கொண்டு பூண்டி நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தின் தொன்மையை விளக்கும் வகையில் தொல் பழங்கால அகழ்வைப்பகம் ஒன்று 1985-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அகழ்வைப்பகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய ஈமப்பேழை கல்மரம், நிலவியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
பூண்டி நீர்த் தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேவையான பணிகளை மேம்படுத்தினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். முடிவு அரசின் கையில்...

 சத்தியமூர்த்தி  நீர்த்தேக்கம் என்ற பெயர் பொறிக்கப்பட்ட நினைவுத் தூண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com