பிளஸ் 1 பொதுத் தேர்வு: மாவட்டத்தில் 41,427 பேர் எழுதுகின்றனர்
By DIN | Published On : 06th March 2019 06:17 AM | Last Updated : 06th March 2019 06:17 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,427 பேர் எழுத இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: தமிழகம் முழுவதும் கடந்த 1-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி, நடைபெற்று வருகிறது. அதேபோல், பிளஸ் 1 தேர்வு புதன்கிழமை (மார்ச் 6) தொடங்கி, தொடர்ந்து 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 19,280 மாணவர்களும், 22,147 மாணவியரும் என மொத்தம் 41,427 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். இதேபோல் பூந்தமல்லி பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 30 பேரும், முகப்பேர்(மேற்கு) நேத்ரோதய மேல்நிலைப் பள்ளியில் இருந்து பார்வையற்றோர் 6 பேரும் பங்கேற்க உள்ளனர்.
இத்தேர்வுக்காக, மாவட்டம் முழுவதும் 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 18 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் அதற்கான வழித்தடங்களில் போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்களை விநியோகம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கவும், கண்காணிப்புப் பணிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், பறக்கும் படை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.