ரூ.30 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 22nd March 2019 03:33 AM | Last Updated : 22nd March 2019 03:33 AM | அ+அ அ- |

மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு, வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த ரூ.30 கோடி மதிப்பிலான 60 டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சென்னை மாதவரத்தில் மத்திய அரசின் வருவாய்த் துறைக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதில் கன்டெய்னர் ஏற்றுமதி-இறக்குமதி தளம் அமைக்கப்பட்டு, சுங்க இலாகாவில் சோதனைக்குப் பிறகு கன்டெய்னர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்தக் கிடங்கில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் திருடு போனதாக மாதவரம் போலீஸில் கிடங்கின் மேலாளர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மத்திய அரசின் கிடங்கில் இருந்து திருடப்பட்ட செம்மரக்கட்டைகளையும், அதற்குக் காரணமானவர்களைத் தேடி வந்தனர்.
இவ்வழக்கில், பூபதி, ராஜேஷ் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கிடங்குக்கு மாதவரம் போலீஸார் வியாழக்கிழமை சென்றனர். அங்கு மத்திய அரசுக் கிடங்கில் இருந்து திருடப்பட்ட செம்மரக் கட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அத்துடன் அங்கு குவியல் குவியலாக பிளாஸ்டிக் கவர்களில் செம்மரக் கட்டைகள் பார்சல் செய்யப்பட்டிருந்ததைக் கண்டனர். இது குறித்து மீஞ்சூர் போலீஸாருக்கும், பொன்னேரி வருவாய்த் துறையினருக்கும் மாதவரம் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் வனத்துறையினரும் அங்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவை, வெளிநாடுகளுக்கு கடத்துவற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில், வனத்துறையினரிடம் மீஞ்சூர் போலீஸார் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...