இரும்புத் தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 28th March 2019 03:42 AM | Last Updated : 28th March 2019 03:42 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் இரும்புத் தொழிற்சாலையை மூடக் கோரி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகள் ஏற்படுவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, அத்தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இந்நிலையில், இத்தொழிற்சாலை வேறொரு பெயரில் கடந்த சில மாதங்களாக செயல்படத் தொடங்கியது.
மிகவும் ஆபத்தான தொழிற்சாலைகள் பட்டியலில் இந்த ஆலை இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இத்தொழிற்சாலை மீண்டும் இப்பகுதியில் செயல்பட எதிர்ப்புத் தெரிவித்து, இப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, தொழிற்சாலையை மூடும் வரை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் தாஸ் தலைமையில், நாகராஜகண்டிகையில், கும்மிடிப்பூண்டி-மாதர்பாக்கம் நெடுஞ்சாலையிலும், வீடுகளின் முன்பும் கருப்பு கொடியேற்றி தேர்தல் புறக்கணிப்பை அறிவித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இதையடுத்து, அங்கு வந்த கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் சுரேஷ்பாபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிற்சாலையில் ஆய்வு செய்து, விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுவதாக தெரியவந்தால், அத் தொழிற்சாலையை மூடுவதாக கோட்டாட்சியர் நந்தகுமார் தெரிவித்தார்.
அதை ஏற்காத பொதுமக்கள் அங்குள்ள மரங்களிலும், வீடுகளிலும் படிந்துள்ள கரித்துகள்களைக் காண்பித்து, தொழிற்சாலையை மூடும் வரை, தேர்தல் புறக்கணிப்பும், காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறி, தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...