திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 22 மனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 28th March 2019 06:10 AM | Last Updated : 28th March 2019 06:10 AM | அ+அ அ- |

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தாக்கல் செய்த 39 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், 22 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாகவும், 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில், வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் தேர்தல் பார்வையாளர் சுரேந்திரகுமார் ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் அனைத்தும் மிகவும் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டன.
பின்னர் ஆட்சியர் கூறியது: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணியான காங்கிரஸ், பி.எஸ்.பி., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 39 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பரிசீலனையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் வெற்றிச்செல்வி, பகுஜன் சமாஜ் கட்சியின் அன்புசெழியன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் டாக்டர் மு.லோகரங்கன் மற்றும் சுயேச்சைகள் என 22 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. பல காரணங்களால் 17 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மேலும், இந்த வேட்பு மனுக்களை வரும் 29-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து, அன்று மாலையில் இறுதிக் கட்ட வேட்பாளர்களின் பெயர்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும். பின்னர், அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் முன்னிலையில் சின்னமும் ஒதுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...