பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி ஆகிய ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் ஏப். 18-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், பொன்னேரி சட்டப் பேரவை தொகுதியில் 310 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இம்முறை வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்நிலையில், பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 310 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மீன்வளக் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப் பதிவு மையங்களில் இந்த இயந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டால் உடனடித் தேவைக்காக 53 மாற்று இயந்திரங்கள் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பொன்னேரி தனி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான நந்தகுமார் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.