உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிட்டது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்த பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் பொதுமக்களின் பார்வைக்கு கடந்த வாரம் வைக்கப்பட்டது. மேலும், இப்பட்டியல் மீதான மறுப்புரை அல்லது கருத்துரைகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் மீதான அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்துப் பேசியது:
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படியே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் இடத்தில் அவை அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த உள்ளாட்சித் தேர்தலை விட நிகழாண்டில் கூடுதலாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தாராளமாக தெரிவிக்கலாம் என்றார்.
அப்போது, ஒரு கிராம ஊராட்சிகளில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதனால், வெகுதூரம் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. எனவே, அந்தந்த கிராம அளவிலேயே வாக்குச்சாவடி மையங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், கட்சியினரும் கருத்து தெரிவித்ததுடன், அதை மனுவாகவும் அளித்தனர்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் தணிகாசலம், நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) சங்கரநாராயணன், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூடுதலாக 254 வாக்குச்சாவடிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்கள் எளிதாக வாக்களிப்பதை வலியுறுத்தி கடந்த தேர்தலை விட கூடுதலாக 254 வாக்குச்சாவடிகள் அமைத்துள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பட்டியல் கடந்தவாரம் வெளியிடப்பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 463 வாக்குச்சாவடிகள், 10 பேரூராட்சிகளில் 216 வாக்குச்சாவடிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 2,554 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3,233 வரைவு வாக்குச்சாவடிகளில் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. அப்போது, அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சேபங்களை நேரிலோ அல்லது எழுத்து மூலமாகவோ அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளில் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது அமைக்கப்பட்டிருந்ததை விடக் கூடுதலாக, நிகழாண்டில் உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, நகராட்சிகளில் 55 , பேரூராட்சிகளில் 17, ஊராட்சி ஒன்றியங்களில் 192 என மொத்தம் 264 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.