திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புப் பணிகள் மும்முரம்
By DIN | Published On : 05th May 2019 11:54 PM | Last Updated : 05th May 2019 11:54 PM | அ+அ அ- |

திருவள்ளூர் நகராட்சியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடைத் திட்ட இணைப்பு கொடுக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியது:
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிப்பது, குப்பைகள் கொட்டுவது போன்றவற்றால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இவற்றைத் தடுத்து, நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டையும் முழு சுகாதாரம் கொண்டதாக மாற்றும் நோக்கில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சிப் பகுதியில் 8,168 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் என்று மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இந்த வளாகங்களில் வெளியேற்றப்படும் கழிவு நீர் தெருக்களிலும், கால்வாய்களிலும் தேங்கும் நிலையிருந்தது. எனவே இனி வருங்காலங்களில் எக்காரணம் கொண்டும் கழிவு நீரை தெருக்களில் விடக்கூடாது என்றும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் இணைப்பு பெறுமாறும் பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான ராட்சதக் குழாய்களை பதிக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு குடியிருப்புக்கும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியை மேற்கொள்வதற்காக தவணை முறையில் முன் வைப்புத் தொகையைப் பெறுதல் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி விரிவாக்கப் பகுதிகள் தவிர 8,168 குடியிருப்புகளில், 4,016 குடியிருப்புகளுக்கு இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடியிருப்புகளுக்கு விரைவில்
இந்த இணைப்பைக் கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.