மதுக் கடைகளில் கலால் துறையினர் கட்டாய வசூல்: சிஐடியு தொழிற்சங்கத்தினர் புகார்
By DIN | Published On : 05th May 2019 12:09 AM | Last Updated : 05th May 2019 12:09 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகளில் அதிகாரிகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் கலால் ஆணையரிடம் அளித்த மனு:
திருவள்ளூர் மாவட்டத்தில் 180-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் கலால் துறை அலுவலர்கள் அவ்வப்போது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் ஒரு மாதகாலமாக ஆய்வுக்காக கலால் அலுவலகத்திலிருந்து வரும் அலுவலர்கள் டாஸ்மாக் பணியாளர்களிடம் ரூ.10 ஆயிரம் வரை கட்டாயமாக வசூலிப்பதாக புகார் கூறுகின்றனர்.
அலுவலர்களின் இந்தப் போக்கால் டாஸ்மாக் கடைகளின் பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கலால் துறை அதிகாரிகள் எதற்காக வசூலிக்கிறார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது. அதனால், சட்டவிரோதமாக இவ்வாறு வசூலிக்கும் அதிகாரிகள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.