திருவள்ளூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு 5 தேர்வு மையங்களில் அரசு அறிவித்த ஆவணங்களில் அசல் மற்றும் நகல் எடுத்து வருமாறு கூறி மாணவ, மாணவிகள் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்தில் இருந்து 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில், 14 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூரில் மட்டும் 3 மையங்கள், வெங்கலில் ஒரு மையம் மற்றும் கும்மிடிப்பூண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்று என 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 619 பேர் உள்பட மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 3,400 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக மாணவ, மாணவிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 10 மணிமுதல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து தேர்வு மையங்கள் முன்பு குவியத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து 12.30 மணி முதல், 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு நுழைவுச் சீட்டு படிவத்துடன் அரசு அறிவித்த ஆவணங்களை உடன் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 11.30 மணி முதல் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அவர்களை தேர்வு மையத்துக்குள் அதிகாரிகள் அனுப்பி வைக்கத் தொடங்கினர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு 500 மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தங்கள் பெற்றோர்களுடன் வந்து காத்திருந்தனர். 11.30 மணி முதல் மையத்திற்குள் அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அரசால் அறிவிக்கப்பட்ட அசல் ஆவணங்களை மாணவர்கள் காண்பித்தனர்.
எனினும், ஆவணங்களின் நகல் வேண்டும் என்றும் நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் நகலெடுக்கும் பல கடைகள் மூடியிருந்தன. திறந்திருந்த கடைகளுக்கு மாணவர்கள் நீண்ட தூரம் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்கும் சூழ்நிலையில் தேர்வு மையமான பள்ளி அருகில் நிழற்குடை மற்றும் தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், அவர்களுடன் வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நிற்க இடமில்லாமல் வெயிலில் காத்திருந்தனர். தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கும் போது காதில் கம்மல் மற்றும் துப்பட்டா அணியக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பெற்றோர்களும் மாணவிகளும் சிரமப்பட்டனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்த மையத்திலும், தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் எவை என்ற தகவல் அளிக்கப்படவில்லை. முன்கூட்டியே எந்த ஆவணங்கள் தேவை என்பதை தெளிவாக குறிப்பிட்டிருந்தால் மாணவ, மாணவிகளை அலைக்கழிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்காது. அதோடு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சரியாக 1.25 மணிக்கு கேட்டை அடைத்து விட்டனர். அந்த நேரத்துக்குள் வந்தோர் வாக்குவாதம் செய்த பின்னரே அனுமதித்தனர் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.