கும்மிடிப்பூண்டி காகிதத் தொழிற்சாலையில் தீ விபத்து
By DIN | Published On : 15th May 2019 07:15 AM | Last Updated : 15th May 2019 07:15 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் காகிதத் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காரம்பேடு பகுதியில் தனியார் காகிதத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, காகிதக் கூழில் இருந்து பேப்பர் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென்று பரவியது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத் துறையினர், நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன. தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர்.
தொழிற்சாலையில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதா என்பது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.