மண் கடத்தல்: ஒருவர் கைது
By DIN | Published On : 15th May 2019 04:04 AM | Last Updated : 15th May 2019 04:04 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே ஏரி வரத்துக் கால்வாயில் மண் கடத்தியதாக ஒருவரைக் கைது செய்த போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் ஆள்கள் இல்லாத நேரத்தில் சிலர் ஏரியில் டிராக்டர் மூலம் மண் கடத்துவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனால் அப்பகுதியைச் சேர்ந்த காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி, மப்பேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, மப்பேடு-திருவள்ளூர் சாலையில், அந்தோணியார்புரம் கிராமம் அருகே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது.
போலீஸாரைப் பார்த்ததும் டிராக்டரைத் திருப்ப சிலர் முயன்றபோது, சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். அப்போது, டிராக்டரை ஓட்டி வந்தது சூசைபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீண் ராஜ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மப்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து பிரவீண்ராஜை கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
ஊத்துக்கோட்டையில்...
வெங்கல் அருகே மாகரல் ஏரியில் டிராக்டரில் மண் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
வெங்கலை அடுத்த மாகரல் கிராமத்தில் உள்ள ஏரியில் சிலர் மண் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயவேலு தலைமையில், போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாகரல் ஏரியில் டிராக்டரில் சிலர் மண் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த துரை ( 50), மேல்கொண்டையூரைச் சேர்ந்த மாணிக்கம் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.