சிதம்பர சுவாமிகளின் 360-ஆவது குரு பூஜை விழா
By DIN | Published On : 19th May 2019 04:35 AM | Last Updated : 19th May 2019 04:35 AM | அ+அ அ- |

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் ஆதீனமான சிதம்பர சுவாமிகளின் 360-ஆவது குருபூஜை விழா சனிக்கிழமை ஆதீன வளாகத்தில் நடைபெற்றது.
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மூலவர் பனைமரத்தில் சுயம்புவாகத் தோன்றினார் என்பது ஐதீகம். இதனால், சுயம்பு மூலவருக்கு தைல அபிஷேகம் மட்டுமே நடைபெறும்.
இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னர் ஆதீனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. கோயில் ஆதீனம் சிதம்பர சுவாமிகள் மூலவர் முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்து வந்தார்.
அதனால், ஆதீனம் சிதம்பர சுவாமிகளுக்கு தனி வழிபாட்டு மண்டபம் கந்தசாமி கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, மாடவீதி அருகே ஆதீனத்துக்கான தனி மடாலயம் உள்ளது.
அங்கு, முருக பக்த ஜன சபையினர் ஒருங்கிணைந்து தவத்திரு சிதம்பர சுவாமிகளுக்கு நாள்தோறும் காலை, மாலை வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சிதம்பர சுவாமிகளுக்கான மகா குருபூஜை ஆண்டுதோறும் கண்ணகப்பட்டில் உள்ள சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதி மடாலயத்தில் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சிதம்பர சுவாமிகளுக்கான 360-ஆவது குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலையில் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கந்தசாமி கோயிலில் உள்ள சிதம்பர சுவாமிகள் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள சிதம்பர சுவாமிகள் சந்நிதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.