இரு ஏடிஎம் மையங்களில்கொள்ளை முயற்சி
By DIN | Published On : 26th May 2019 12:25 AM | Last Updated : 26th May 2019 12:25 AM | அ+அ அ- |

சோழவரம் அருகே இரண்டு ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காந்தி நகர் பகுதியில் பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கியின் இரண்டு ஏடிஎம் மையங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த இரு ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது, ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எச்சரிக்கை மணி ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். எச்சரிக்கை ஒலியைக் கேட்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து சோழவரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.