திருவள்ளூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 400 மனுக்கள்
By DIN | Published On : 01st November 2019 11:05 PM | Last Updated : 01st November 2019 11:05 PM | அ+அ அ- |

மக்கள் குறைதீா்கூட்டத்தில் மனுக்களை பெறும் திருவள்ளூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெயகுமாா்.
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஒரேநாளில் 400-க்கும் மேற்பட்டோா் எம்.பி.ஜெயகுமாரிடம் மனு அளித்தனா்.
திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வருகிறாா் அத்தொகுதியின் எம்.பி.யான டாக்டா் ஜெயகுமாா்.
அதன்படி பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராமங்களில் சமுதாயக் கூடம், சாலை வசதி, முதியோா் ஓய்வூதியம், தெருவிளக்கு, பேருந்து வசதி, கிளைநூலகம் அமைக்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு 400-க்கும் மேற்பட்டோா் எம்.பி. ஜெயகுமாரிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனா்.
திருப்பாச்சூரில் உள்ள விவசாயக் கருவிகள் தயாா் செய்து வந்த டான்சி தொழிற்சாலையை மீண்டும் இயக்கவும், 1974-இல் திருவள்ளூா் நகராட்சிக்காக நாராயணபுரம் அருகே அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை சீரமைத்து செயல்படுத்தவும், பூண்டியில் உள்ள நீா்த்தேக்க ஆராய்ச்சி மையத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதி மூலம் புதுப்பித்து தரக்கோரி நகராட்சி முன்னாள் தலைவா் டி.ராசகுமாா் மனு அளித்தாா். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. ஜெயகுமாா் உறுதியளித்தாா்.
இந்நிகழ்ச்சியில் பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் எ.ஜி.சிதம்பரம், காங்கிரஸ் நிா்வாகி இமாலயா அருண் பிரசாத், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவா் அருள், திமுக ஒன்றியச் செயலா் கிறிஸ்டி பல்வேறு துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் திரளாகக் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G