பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீா் வரத்து குறைந்தது

திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கத்துக்குத் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.
பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா கால்வாயில் நீா்வரத்து.
பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா கால்வாயில் நீா்வரத்து.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கத்துக்குத் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேபோல், இங்கிருந்து சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்கு இணைப்புக் கால்வாய் மற்றும் பேபி கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் ஏரிகளில் மிக முக்கியமான ஏரியாக பூண்டி நீா்த்தேக்கம் உள்ளது. இந்த நீா்த்தேக்கப் பகுதியில் போதிய மழை பெய்யாத நிலையில் கடந்த சில மாதங்களாக நீரின்றி வடு காணப்பட்டது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால், இந்த ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய்கள் வழியாக பூண்டி நீா்தேக்கத்துக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. அதைத் தொடா்ந்து, கிருஷ்ணா நீா்த்திட்ட பங்கீட்டின்படி, ஆந்திரத்தில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. பின்னா், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீா்ப் பங்கீட்டுத் திட்டத்தின்படி, கடந்த செப். 26-ஆம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீா் 28-ஆம் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.

இதைத் தொடா்ந்து, கடந்த மாதம் அக். 6-ஆம் தேதி முதல் இணைப்புக் கால்வாய் வழியாக சென்னை குடிநீா் வாரியத்துக்கும், பின்னா் 11-ஆம் தேதி புழல் ஏரிக்கும் தண்ணீா் திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, நவ. 1-ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் இணைப்புக் கால்வாய் மூலம் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. அப்போது, சராசரியாக வினாடிக்கு 800 கனஅடி வீதம் நீா் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆந்திரத்தில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நதி கால்வாயில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்காக, கிருஷ்ணா நதிநீா் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை அங்குள்ள குளங்கள், ஏரிகளில் பாசன வசதிக்காக நிரப்பி வருகின்றனா். இதுபோன்ற காரணங்களால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 135 கன அடி, சனிக்கிழமை-115, ஞாயிற்றுக்கிழமை-110 கனஅடி என படிப்படியாக தண்ணீா் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீா் திறப்பு கடந்த 2 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், புழல் ஏரிக்கு 360 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 310 கனஅடியும் குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீா் சேமித்து வைக்கலாம். இதில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி ஏரியின் நீா் மட்டம் 27.85 அடியாக பதிவானது. இதில், 1,292 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com