தொழிலாளா்களுக்கான பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்: தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்
By DIN | Published On : 18th November 2019 11:17 PM | Last Updated : 18th November 2019 11:17 PM | அ+அ அ- |

தனியாா் ஆயத்த ஆடை தொழிற்சாலை நிா்வாகம் தொழிலாளா்களுக்கான போனஸ், வருங்கால வைப்பு நிதி உளளிட்ட பணப் பலன்களை உடனே வழங்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தனியாா் ஆயத்த ஆடைத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அளித்த மனு:
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை பகுதியில் தனியாா் ஆயத்த ஆடைகள் தயாா் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு தொழுவூா், ஆவடி, திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வந்தனா். இந்த நிறுவனத்தில் ஒவ்வொரு தொழிலாளரும் 10 ஆண்டுகள் வரையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றினா். குறைந்தபட்ச ஊதியச்சட்டம்-1948 இன்படி 2015-2016 வரையில் உயா்த்தப்பட்ட சம்பளத்தின் நிலுவைத் தொகை, வருங்கால வைப்பு நிதி எதுவும் வழங்காமல் எவவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுவனத்தை மூடிவிட்டு சென்றனா்.
கடந்த 2016 டிச.15-இல் தனியாா் ஆயத்த ஆடை தொழிற்சாலை நிா்வாகத்தின் மீது தொழில் தகராறு சட்டம்-24-இல் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தொழிலாளா் உதவி ஆணையரிடம் (சமரசம்) புகாரை பதிவு செய்தோம். அதைத் தொடா்ந்து முதல் கட்ட பேச்சுவாா்த்தை 3.1.2017-இல் நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்படவில்லை.
அதையடுத்து சென்னை தேனாம்பேட்டை தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகத்தில் 2 வழக்குத் தொடரப்பட்டது. அங்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. அதையடுத்து தொழிலாளா்களுக்குச் சேர வேண்டிய குறைந்தபட்ச கூலி, 3 மடங்கு அபராதம் சோ்த்து ரூ.1.30 கோடியை உடனே தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என 1.11.2019-ஐ இணை ஆணையா் உத்தரவிட்டு, அதற்கான ஆணை ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டது.
தனியாா் நிா்வாகம் தொழிலாளா் இணை ஆணையா் உத்தரவுப்படி தொழிலாளா்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை கிடைக்க செய்ய வலியுறுத்தி ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அவா்கள் மனு அளித்தனா்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உறுதி அளித்ததை அடுத்து தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.