ஏரிக்கரையை உடைத்து தொழிற்சாலைக்கு பாதை அமைக்க முயற்சி

திருவள்ளூர்  அருகே தனியார் தொழிற்சாலைக்கு மூலப்பொருள்கள் கொண்டு செல்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரிக்கரையை உடைத்து, பாதை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, மேல்நல்லாத்தூர் கிராம
ஏரிக்கரையை உடைத்து தொழிற்சாலைக்கு பாதை அமைக்க முயற்சி


திருவள்ளூர்  அருகே தனியார் தொழிற்சாலைக்கு மூலப்பொருள்கள் கொண்டு செல்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரிக்கரையை உடைத்து, பாதை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, மேல்நல்லாத்தூர் கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் தனியார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலைக்கு அருகில் பட்டரை கிராமத்துக்கான ஏரி 32 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தனியார் தொழிற்சாலைக்குத் தேவையான உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள்களை பட்டரை வழியாக எடுத்துச் சென்றால் தொலைவாக உள்ளதாம். இதனால், ஏரிக்கரையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து மணல் அள்ளி, பாதை அமைத்து, எளிதில் வாகனம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த பட்டரை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஏரிக்கரையை உடைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன், வட்டாட்சியர் எம்.பாண்டியராஜன் ஆகியோர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த ஏரியின் நீர் ஆதாரம் இப்பகுதியின் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 
அத்துடன், 200-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், எவ்வித முன் அனுமதியின்றியும் தனியார் வாகன உதிரி பாகங்கள் கொண்டு செல்வதற்காக பொக்லைன் மூலம் ஏரியில் மணல் அள்ளி, பாதை அமைத்து வருகின்றனர். இதனால், மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரும் வெளியேறும் வகையில், தனியார் தொழிற்சாலை நிர்வாகம் செயல்படுகிறது. 
இத்தொழிற்சாலை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, வட்டாட்சியர் பாண்டியராஜன் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநர்  சிவகண்டன், தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com