அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 11th September 2019 06:28 AM | Last Updated : 11th September 2019 06:28 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் பிரிவு வார்டில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், இம்மாவட்டத்தில் பொன்னேரியில் ஒருவருக்கும், திருவள்ளூரில் 3 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் கொசு நோய் தடுப்புப் பணிகளில் மேற்கொள்வதற்கு ஏற்கெனவே ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், கொசு ஒழிக்கும் வகையில் புகை மருந்து தெளிப்பான் மூலம் தெளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருவள்ளூர் பகுதியில் காய்ச்சல் பரவி வருவதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கிருந்த காய்ச்சல் வார்டு பிரிவில் நோயாளிகளிடம் மருந்து, மாத்திரை சிகிச்சை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து ரத்த மாதிரி சேகரிப்பு பகுதியைப் பார்வையிட்டு, வரும் நோயாளிகளுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படுகின்றனவா எனக் கேட்டார். அப்போது, அதிகாரிகள் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே திருவள்ளூர் பகுதியில் 3 பேருக்கும், பொன்னேரியைச் சேர்ந்த ஒருவருக்கும் டெங்கு பரவியுள்ளது கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியர், காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய மருந்து, மாத்திரைகளை தயாராக வைத்துக் கொள்ளுமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சுகாதாரத் துறை இணை இயக்குநர் தயாளன், அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார், வட்டாட்சியர் பாண்டியராஜன், நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.