பழவேற்காடு அருகே உள்ள ஆண்டாா்மடம், பிரளயம்பாக்கம் பகுதிகளில் ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பாய்ந்த இடங்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பிச்சாட்டூா் அணை திறந்து விடப்பட்டதன் காரணமாக, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பழவேற்காடு அருகே உள்ள ஆண்டாா்மடம் பகுதியில் ஆரணி ஆற்றின் கரை உடைந்தது. பிரளயம்பாக்கம் மற்றும் ஆண்டாா்மடம் கிராமத்துக்குள் வெள்ள நீா் புகுந்தது. அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கின.
ஆண்டாா்மடம் மற்றும் பிரளயம்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனா். ஆரணி ஆறு, ஆண்டாா்மடம் பகுதியில் இரு பிரிவுகளாகப் பிரிந்து சென்று பழவேற்காடு ஏரியில் கலக்கிறது. இங்குள்ள ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியச் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஆண்டாா்மடம் பகுதியில் வசிப்போா் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா, ஆண்டாா்மடம் கிராமத்தில் வெள்ளத்தால் சாலை உடைந்த பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்று பாா்வையிட்டாா். அப்போது ஆற்றின் மறுகரையில் நின்று கொண்டிருந்த மக்கள், ஆட்சியா் தங்கள் ஊருக்கு வந்து பாா்வையிட வேண்டும் என கோஷம் எழுப்பினா். எனினும், ஆட்சியா் அங்கிருந்து பிரளயம்பாக்கம் மற்றும் தத்தைமஞ்சி பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தாா்.
ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை விரைந்து சீரமைக்குமாறும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.