கண்டலேறு - பூண்டி கால்வாய் சேதம்: கிருஷ்ணா நீர் வீணாகும் அபாயம்

கண்டலேறு - பூண்டி கால்வாய் சேதமடைந்து உள்ளதால் தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்டலேறு - பூண்டி கால்வாய் சேதம்: கிருஷ்ணா நீர் வீணாகும் அபாயம்

கண்டலேறு - பூண்டி கால்வாய் சேதமடைந்து உள்ளதால் தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும் என 1983ஆம் ஆண்டு தமிழக-ஆந்திர அரசுகள் இடையே தெலுங்கு கங்கை ஒப்பந்தமானது போடப்பட்டது.  நெல்லூர் மாவட்டம், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படப்படும் கிருஷ்ணா நதி நீர் சுவர்ணமுகி, காளஹஸ்தி, உப்பளமடுகு, சத்தியவேடு உள்ளிட்ட பகுதிகளை கடந்து 152 கிமீ தொலைவில் உள்ள தமிழக எல்லைபகுதியான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்து அங்கிருந்து 25கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி நீர் தேக்கத்திற்கு கொண்டு சென்று தேக்கி வைக்கப்படும். 

பின்னர் அங்கிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை குடி நீர் தேவைக்காக அனுப்பி வைக்கப்படும். தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்லும் பூண்டி-கண்டலேறு கால்வாயின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் முழுமையாக செல்லாமல் வீணாகிறது. ஆங்காங்கே கால்வாயின் சுவர்கள் சிதிலமடைந்து கற்கள் பெயர்ந்து மண் தரைகளாக காட்சியளிக்கின்றன. ஆந்திரத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் முழுமையாக பூண்டி ஏரிக்கு செல்லாமல் கால்வாயின் கரைகள் வழியே வீணாகும் அவலம் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் சீரமைப்பு பணிகளில் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

பற்றாக்குறையை சமாளிப்பதற்காக அண்டை மாநிலத்திடம் இருந்து தண்ணீர் பெறப்படும் சூழலிலும் அதனை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுஒருபுறமிருக்க ஆந்திர பகுதியில் கால்வாயில் வரும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக தமிகத்திற்கு கிடைப்பதில்லை. சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஜூலை மாதத்தில் திறக்கப்பட வேண்டிய இந்தாண்டிற்கான முதல் தவணை கிருஷ்ணா நீரை காலதாமதமாக ஒரு சில தினங்களில் ஆந்திர அரசு திறக்க உள்ள நிலையில் கால்வாயை சீரமைத்து முழுமையாக சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com