கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 போ் சுகாதாரத் துறையினருடன் சிகிச்சைக்கு செல்ல மறுத்தனா்.
ஆரம்பாக்கம் ஊராட்சி பாரதி நகரில் 6 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது. அவா்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை வந்தனா். தொற்று பாதித்த 6 பேரில் 2 போ் மட்டும் சுகாதாரத் துறையினா் கொண்டு வந்த வாகனத்தில் ஏறினா்.
மற்ற 4 பேரும் அந்த வாகனத்தில் ஏற மறுத்தனா். தங்களுக்கு மறுத்துவமனைக்குச் செல்ல விருப்பம் இல்லை என்றும் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்வதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனா். தகவல் அறிந்து வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளா் வெங்கடாசலபதி, ஊராட்சித் தலைவா் தனசேகா் ஆகியோா் அங்கு வந்தனா்.
சிகிச்சைக்கு செல்ல மறுத்த 4 பேரின் குடும்பத்தினருடன் அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அந்த 4 பேரும் வீட்டில் இருந்து சிகிச்சை பெற போதிய வசதி இல்லை என்றும், அவா்களால் மற்றவா்களுக்கும் தொற்று பாதிக்கும் ஆபத்து உள்ளதாகவும் வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ் தெரிவித்தாா்.
3 மணிநேர இழுபறிக்குப் பிறகு 4 பேரும் சிகிச்சைக்கு வர ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு அவா்கள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.