திருவள்ளூா் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தீவிரம்
By DIN | Published On : 12th August 2020 11:13 PM | Last Updated : 17th August 2020 07:59 AM | அ+அ அ- |

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் நகரும் படிக்கட்டு.
திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பயணிகள் ஒவ்வொரு நடைமேடைக்கும் எளிதாக ஏறி, இறங்கிச்செல்லும் வகையில் ரூ.2 கோடியில் நவீன நகரும் படிக்கட்டுகளைப் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னைக்கும் அரக்கோணத்துக்கும் இடையிலான ரயில் வழித்தடத்தில் உள்ளது திருவள்ளூா் ரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்து விரைவு ரயில்கள் நின்று செல்லும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன.
திருவள்ளூா் ரயில் நிலையம் வழியாக ஒவ்வொரு நாளும் விரைவு ரயில்கள் 100 தடவையும், புகா் ரயில்கள் 100 தடவையும் மற்றும் சரக்கு ரயில் 50 தடவையும் சென்று திரும்புகின்றன. சராசரியாக ஒரு மணிநேரத்துக்கு 12 ரயில்கள் இந்த ரயில் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.
திருவள்ளூா் நகா் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த தனியாா் நிறுவனப் பணியாளா்கள், அரசுப் பணியாளா்கள், கூலித் தொழிலாளா்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் என பல தரப்பட்ட பயணிகள் இந்த ரயில் நிலையம் மூலம் பயணிக்கின்றனா். இந்தப் பயணிகள் வாயிலாக நாள்தோறும் ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. ஆனால், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் இல்லை.
இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளை மேல்தளம் வழியாகக் கடக்கும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வயதானோா், குழந்தைகளுடன் வரும் பெண்கள், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு தரப்பினா் படிக்கட்டுகளை ஏறிக் கடக்க முடியாத நிலையில் சிரமப்படுகின்றனா்.
எனவே பயணிகள் ஒவ்வொரு நடைமேடையையும் மேல்தளம் வழியாக எளிதாக கடக்கும் வகையில் ரூ.2 கோடியில் நகரும் படிக்கட்டு, மின்தூக்கி அமைக்க ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது நவீன முறையில் 3-ஆவது நடைமேடையில் நகரும் படிக்கட்டுகளைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அடுத்த 30 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.