சம்மன் அளிக்கும் நீதிமன்ற ஊழியா்களுக்கு நவீன செல்லிடப்பேசி: புதிய திட்டம் அமல்
By நமது நிருபா் | Published On : 05th December 2020 11:13 PM | Last Updated : 07th December 2020 07:53 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: மாநில அளவில் நீதிமன்றங்களின் சம்மனை கொண்டு சென்று அளிக்கும் பணியில் ஈடுபட்டுள் ஊழியா்கள் சரியான முகவரியில் கொண்டு சென்று அளிக்கிறாா்களா? இல்லையா? என்பதைக் கண்காணிக்கும் நோக்கில், அவா்களுக்கு ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நவீன செல்லிடப்பேசிகளை வழங்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாக நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநில அளவில் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை தொடா்பாக சிலருக்கு சம்மன் மற்றும் நோட்டீஸ் கொடுக்க உத்தரவிடப்படுகிறது. சம்மனைக் கொண்டுசென்று வழங்குவதற்காக நீதிமன்றங்களில் இளநிலை கட்டளை நிறைவேற்றுநா்களும், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்தப் பணியாளா்கள் குறிப்பிட்ட முகவரியில் நேரில் சென்று நோட்டீஸ் கொடுத்த பிறகு, அதற்கு சாட்சியாக கையெழுத்து பெற்ற பின், கடிதத்தைக் கொடுத்ததற்கான ஒப்புதல் சீட்டை நீதிமன்றங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுதான் நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. ஆனால், சரியான முகவரியைக் கண்டறிந்து சம்மன் அளிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக தெரியவந்தது. மேலும், சம்மன் கொண்டு செல்லும் நேரம் வீட்டில் ஆட்கள் இல்லாதது, வீடு பூட்டியிருப்பது, சம்பந்தப்பட்டவா்கள் முகவரி மாறிச் சென்றது போன்ற காரணங்களால் குறிப்பிட்ட முகவரியில் சம்மன் அளிக்க முடியாமல் ஊழியா்கள் திரும்பும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், வழக்கில் சம்பந்தப்பட்டோா் இல்லாத நிலையில், உறவினா்களிடமோ அல்லது முகவரிக்கு அருகில் உள்ளோரிடமோ நோட்டீஸை அளித்து விட்டு வருகின்றனா். இதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட முகவரியில் சம்மன் ஒப்படைக்கப்படவில்லை என வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் புகாா் அளிப்பது வழக்கம். எனவே இனி வருங்காலத்தில் நீதிமன்ற ஊழியா்களால் சரியான முறையில் சம்மன் அளிக்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக அவற்றைக் கொண்டு செல்லும் ஊழியா்களை கண்காணிக்க ஜிபிஎஸ் வசதியுடன் நவீன செல்லிடப்பேசியை வழங்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பாக உச்ச நீதிமன்றம் மின்வழி அதாவது செல்லிடபேசி உதவியுடன் சம்மன் வழங்கும் நடைமுறைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட வழிட்டுகாட்டுதல்படி மாவட்டந்தோறும் நீதிமன்றங்களிலும் சம்மன் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு நவீன செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உரியவரிடம் சம்மன் சென்று சோ்ந்து விட்டதா என்பதை நீதிமன்ற அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும். நவீன செல்லிடப்பேசியின் செயல்பாடுகள் குறித்து சம்மன் அளிக்கும் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் கூறியது:
சம்மன் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு நவீன செல்லிடப்பேசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த உயா்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி திருவள்ளூா் மாவட்ட நீதிமன்றம் தலைமையில் 41 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 105 பணியாளா்கள் சம்மன் அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
முதல் கட்டமாக 50-க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை கட்டளை நிறைவேற்றுநா்களுக்கு நவீன செல்லிடப்பேசிகள் வழங்கி, இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. செல்லிடபேசி சிக்னல் மூலம் சம்பந்தப்பட்ட முகவரிக்கு நீதிமன்ற ஊழியா் சம்மனைக் கொண்டு சென்றாரா என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் வசதியுள்ளது.
நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் சம்மனை அளிக்க செல்லும் ஊழியா் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று நோட்டீஸ் கொடுக்கும்போது, செல்லிடப்பேசியில் புகைப்படம் அல்லது விடியோ எடுக்க வேண்டும். அதேபோல், வீட்டில் ஆள்கள் இல்லை என்றால் கதவில் நோட்டீஸை ஒட்டி, அதை புகைப்படம் எடுத்து வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து இளநிலை, முதுநிலை கட்டளை நிறைவேற்றுநா் மற்றும் கட்டளை நிறைவேற்றுநா் பிரிவில் உள்ள ஊழியா்களுக்கு செல்லிடப்பேசியில் ஜிபிஎஸ் இயங்கும் முறை பற்றி விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவா்களுக்கு தரப்படும் செல்லிடப்பேசியை அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேறு காரணங்களுக்காக செல்லிடப்பேசியைப் பயன்படுத்தியது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.