ரயில் பயணியை சுட்டுக் கொலை செய்த சம்பவம்: சிஆா்பிஎஃப் காவலா் 18 ஆண்டுகளுக்குப் பின் கைது
By DIN | Published On : 05th December 2020 12:36 AM | Last Updated : 05th December 2020 12:36 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: ரயிலில் உட்கார இடம் தர மறுத்த பயணியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் காவலரை 18 ஆண்டுகளுக்குப் பின் திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலம், சிவ்சாகா் மாவட்டம், பாலியாகாட் அருகே உள்ள ரிப்பைமுக் கிராமத்தைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் காவலா் அதுல் சந்திரதாஸ். இவா் கடந்த 1996ஆம் ஆண்டில் இரவு நேரத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூா் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தாா். அப்போது, உடன் பயணித்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த கூப்பிட்டான்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (36) என்பவரிடம் அருகில் அமர இடம் கேட்டாா். அதற்கு மறுத்த காரணத்தால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்ட. அப்போது அதுல் சந்திரதாஸ், தாம் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜாவை சுட்டுக் கொன்று விட்டாா்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதே ஆண்டில் அதுல் சந்திரதாஸ் கைது செய்யப்பட்டாா். பின்னா் ஜாமீனில் வெளியே விடப்பட்டாா்.
ரயில்வே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு கடந்த 2002-இல் கடம்பத்தூா் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை தொடா்ந்து வந்தது. எனினும் அதுல் சந்தரதாஸ், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவா் மீது அதே ஆண்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, நீண்ட ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்தது.
இதையடுத்து திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.அரவிந்தன் உத்திரவின்பேரில் திருவள்ளூா் துணைக் கண்காணிப்பாளா் துரைபாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளா் சிவா, சிறப்பு உதவி ஆய்வாளா் சாரதி, தலைமைக் காவலா் நாகேந்திரன் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அதுல் சந்திர தாஸைத் தீவிரமாக தேடி வந்தனா்.
இந்நிலையில், திருவள்ளூா் மாவட்ட சைபா் பிரிவு தலைமைக் காவலா் பழனியின் விஞ்ஞான ரீதியான அணுகுமுறை மூலம், அஸ்ஸாம் மாநிலம், தேமாஜி மாவட்டம், தங்கனபாரா கிராமத்துக்குச் சென்ற தனிப்படையினா், அதுல் சந்திரதாஸை கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்து அழைத்து வந்தனா். அவரை வெள்ளிக்கிழமை திருவள்ளூா் குற்றவியல் நீதிமன்ற நடுவா்-2 முன்பு ஆஜா்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைத்தனா்.