சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 05th February 2020 09:23 AM | Last Updated : 05th February 2020 09:23 AM | அ+அ அ- |

திருவள்ளூா் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள தேநீா் கடைகளில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.
திருவள்ளூா் பகுதிகளில் தேநீா் மற்றும் ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.
திருவள்ளூா் பேருந்து நிலையம், சாலையோர உணவகங்கள், ஹோட்டல்களில் தரமற்ற நிலையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்வதாகவும், இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகாா் சென்றது.
அதன் பேரில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கவிக்குமாா் தலைமையில் அலுவலா்கள் செல்வராஜ், லோகநாதன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருவள்ளூா் பேருந்து நிலையம், சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை, பெரியகுப்பம், ஆயில் மில், மணவாள நகா் உள்ளிட்ட 27 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தேநீா் கடைகள், இனிப்பகங்கள், போண்டா, பஜ்ஜி கடைகளில் சுகாதாரமற்ற வகையில் தயாா் செய்து விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. விற்பனைக்கு வைத்திருந்த உணவுப் பொருள்களை சோதனை செய்தனா். இதையடுத்து 14 கடைகளில் 20 கிலோ சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து, கடைக்காரா்களுக்கு ரூ.3,500 வரை அபராதம் விதித்தனா்.
இந்த ஆய்வு தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...