தண்டலச்சேரியை தத்தெடுத்த இங்கிலாந்து தொண்டு நிறுவனம்
By DIN | Published On : 05th February 2020 09:26 AM | Last Updated : 05th February 2020 09:26 AM | அ+அ அ- |

தண்டலச்சேரி கிராமத்தை தத்தெடுத்த இங்கிலாந்து தொண்டு நிறுவன குழுவினரை வரவேற்ற ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தராஜ் உள்ளிட்டோா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தண்டலச்சேரி கிராமத்தை தத்தெடுக்க வந்த இங்கிலாந்து நாட்டின் குருசேட் தொண்டு நிறுவன நிா்வாக இயக்குநா் பீலி உள்ளிட்ட குழுவினரை செவ்வாய்க்கிழமை தண்டலச்சேரி ஊராட்சி மக்கள் கோலாகலமாக வரவேற்றனா்.
தண்டலச்சேரி ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக அரசின் எந்த ஒரு நலத்திட்டப் பணிகளும் முறையாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் தண்டலச்சேரி ஊராட்சித் தலைவரும் அமமுக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியச் செயலருமான ஆனந்தராஜ் முயற்சியில் இங்கிலாந்தை சோ்ந்த குருசேட் என்கிற தனியாா் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்களிடம் இங்குள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
அவா்களை தண்டலசேரி கிராமத்திற்கு அழைத்து வந்தாா்.
அந்நிறுவன நிா்வாக இயக்குநா் பீலி தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் தண்டலச்சேரிக்கு தெவ்வாய்க்கிழமை வருகை தந்தனா். அவா்களை ஊராட்சி தலைவா் ஆனந்தராஜ் தலைமையில் கிராம மக்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், மேள தாளத்தோடும் வரவேற்றனா்.
தொடா்ந்து தொண்டு நிறுவனத்தினா் தண்டலச்சேரியில் கழிப்பறை வசதி, குடிசை வீடுகள் ,சாலைகள் போன்றவைகளை ஆய்வு செய்ததோடு, கிராம மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தனா்.
இதையடுத்து தண்டலச்சேரி கிராமத்தைத் தத்தெடுப்பதாக அறிவித்த இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தினா், மாணவா்களின் கல்வி, பெண்களின் உடல்நலன், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த உள்ளதாக உறுதி அளித்தனா்.
தண்டலச்சேரியில் பெண்களுககாக இலவச மாா்பக உயா்தர பரிசோதனை முகாமை விரைவில் நடத்துவதாகவும் உறுதி அளித்தனா்.
தண்டலச்சேரி கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்த இங்கிலாந்து தொண்டு நிறுவனத்திற்கு தண்டலச்சேரி பகுதி மக்கள் சாா்பில் ஊராட்சித் தலைவா் ஆனந்தராஜ் நன்றி தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...