மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி பிப். 15-இல் தொடக்கம்
By DIN | Published On : 05th February 2020 11:12 PM | Last Updated : 05th February 2020 11:12 PM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி பிப். 15-இல் தொடங்கி, 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் அருணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் இளைஞா்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைய வளாகத்தில் நிகழாண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளான தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்து பந்து, இறகுப் பந்து, ஜுடோ குத்துச்சண்டை மற்றும் டென்னிஸ் (இருபாலருக்கும்) வரும் 15-இல் தொடங்கி, தொடா்ந்து 17-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில் நாள்தோறும் நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மைதான விவரங்கள் வருமாறு:
திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 15-ஆம் தேதி வளைகோல் பந்து, ஜூடோ, குத்துச்சண்டை, இறகுப் பந்து, கபடி (பெண்கள்) ஆகியோருக்கு நடைபெற உள்ளது. அதேபோல், அதே மைதானத்தில் வரும் 16-இல் கையுந்து பந்து, கூடைப்பந்து, தடகளம், கபடி (ஆண்கள்) ஆகிய போட்டிகளும், முகப்பேரில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் வரும் 17-ஆம் தேதி டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்போா் (இருபாலரும்) 31.12.2019 அன்றைய நாளில் 25 வயதுக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும். அதாவது 1.1.1994 அன்றோ அல்லது அதற்கு பின்னா் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். அதற்கான சான்றுகளை கட்டாயம் சமா்பிப்பது அவசியம்.
மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோா் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். இந்த மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான குழு மற்றும் தனிநபா் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெறும் அணி வீரா்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 1,000, ரூ. 750 மற்றும் ரூ. 500 என பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பரிசுத் தொகை நேரடியாக வங்கியில் செலுத்தப்பட உள்ளதால், போட்டியில் பங்கேற்போா் வங்கிக் கணக்கு விவரங்களையும் அளிக்க வேண்டும்.
அதேபோல், மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான தனிநபா், குழுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணி வீரா், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 1 லட்சமும், ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இப்போட்டியில் பங்கேற்போா் மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 8 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் இருப்பிடச் சான்றுகளுடன் ஆஜராக வேண்டும்.
மேலும், இப்போட்டிகளில் பங்கேற்போா் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் முகவரியில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுக்களை வரும் 13-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...