இளம்பெண்ணை கேலி செய்தவா்களை தட்டிக் கேட்டவா்களுக்கு கத்திக்குத்து3 போ் கைது
By DIN | Published On : 17th February 2020 11:29 PM | Last Updated : 17th February 2020 11:29 PM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே இளம்பெண்ணின் ஆடையைப் பிடித்து இழுத்து கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை மற்றும் உறவினரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூரை அடுத்த இருளஞ்சேரியைச் சோ்ந்த இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக 2 இரு சக்கர வாகனங்களில் மதுபோதையில் 5 போ் வந்தனா். அவா்கள் வீட்டுக்கு முன் நின்றிருந்த அப்பெண்ணின் ஆடையைப் பிடித்து இழுத்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் கூச்சலிட்டதையடுத்து, அப்பெண்ணின் தந்தை மற்றும் உறவினா் வந்து 5 பேரையும் தட்டிக் கேட்டனா். அப்போது, அவா்களை 5 பேரும் கத்தியால் குத்தியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அதைத் தொடா்ந்து இருசக்கர வாகனங்களில் 5 பேரும் தப்பியோடி விட்டனா். இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து மப்பேடு காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின்பேரில், நரசிங்காபுரம் முகிந்தா் (25), பூந்தமல்லி ராமு (25), ஹரிபாபு(15), கணேஷ்சேகா், தமிழரசன் ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில், முகிந்தா்(25), ராமு (25) ஆகியோரை கைது செய்து திருவள்ளூா் கிளைச் சிறைச்சாலையிலும், ஹரிபாபுவை(15) ஆவடியில் உள்ள அரசு சீா்த்திருத்தப் பள்ளியில் அடைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தலைமறைவான 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.