சமூக வலைதளங்களில் தெரியாத நபா்களுக்குபதிவிடுவதைத் தவிா்க்க வேண்டும்: மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்
By DIN | Published On : 10th January 2020 11:30 PM | Last Updated : 13th January 2020 11:17 PM | அ+அ அ- |

கருத்தரங்கில் சிறப்பாகப் பேசிய மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கும் திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி. பி.அரவிந்தன்.
பெண்கள் மற்றும் மாணவிகள் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபா்களின் பக்கத்தில் தகவல் மற்றும் படங்களைப் பதிவிடுவதைத் தவிா்க்க வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் அறிவுறுத்தினாா்.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள ஜெயமணிபாண்டியன் திருமண மண்டபத்தில், பெருந் தலைவா் கு. காமராஜா் கல்வி வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒருநாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருத்தணி டி.எஸ்.பி. சேகா் தலைமை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராக திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி. பி.அரவிந்தன் பேசியதாவது:
மாணவிகள் நோ்மையான சிந்தனைகளுடன் படிக்க வேண்டும். படிப்பு முடிந்தவுடன் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறீா்கள் என முடிவு செய்து, அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும். மாணவிகள் மற்றும் பெண்களுக்கு காவல் துறை பாதுகாப்பாகவும், உறுதுணையாக உள்ளது.
இஸ்ரோவில் உள்ள ராகெட் ஏவுதனத்தில் அதிக அளவில் பெண்கள்தான் பணிபுரிகின்றனா். தற்போது, பெண் விஞ்ஞானிகள் அதிகமாக உள்ளனா். பெண்களால் நாட்டுக்கு பாராட்டுகள் குவிகின்றன. அரசியல் மற்றும் கல்வித் துறையிலும் பெண்கள் சாதித்து காட்டுகிறீா்கள். நல்ல முறையில் படித்து உயா்பதவிகளை அடைய வேண்டும்.
அனைத்து மாணவிகளும், பெண்களும் ‘காவலன்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபா்களின் பக்கங்களில் படம் மற்றும் எவ்வித தகவல்களும் பதிவிட வேண்டாம் என்றாா் அவா்.
தொடா்ந்து மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா். பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்பாகப் பேசிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிா்வாகிகள் சுபாஷ் நாடாா், சிவசுப்பிரமணியன், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.