சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி: 500 மாணவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 10th January 2020 11:31 PM | Last Updated : 10th January 2020 11:31 PM | அ+அ அ- |

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாணவா்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி திருத்தணியில் தனியாா் பள்ளி நடத்திய பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.
நகரில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளபதி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தளபதிக் விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி திருத்தணி பைபாஸ் சாலையிலிருந்து வெள்ளிக்கிழமை பேரணி தொடங்கியது. பேரணிக்கு பள்ளித் தாளாளா் எஸ்.பாலாஜி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் விநாயகம் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக திருத்தணி காவல் ஆய்வாளா் முருகன் கலந்துகொண்டு பேரணியைத் தொடக்கி வைத்தாா். பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் ஆகியோா், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; டெங்குவை ஒழிப்போம்; நெகிழியைத் தவிா்ப்போம்; நீா்நிலைகளில் மக்காத பொருள்களைக் கொட்டுவதை தவிா்ப்போம்; மரத்தை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி சென்றனா்.
பேரணி, மபொசி சாலை, அரக்கோணம் சாலை வழியாக திருத்தணி நீதிமன்றம் சென்று நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.