கரோனா பாதித்த பகுதிகளில் கோட்டாட்சியா் திடீா் ஆய்வு
By DIN | Published On : 21st July 2020 05:23 AM | Last Updated : 21st July 2020 05:23 AM | அ+அ அ- |

ஆரணி பஜாா் பகுதியில் கடை அருகே ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியா் வித்யா.
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் ககரோனா பாதித்த பகுதிகளில் கோட்டாட்சியா் வித்யா ஆய்வு மேற்கொண்டாா்.
பொன்னேரி வருவாய்க் கோட்டாட்சியா் வித்யா, ஆரணி பஜாரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தாா். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்த மளிகைக்கடைகள், துணிக் கடைகள், செல்லிடப்பேசி கடைகள் என 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அவா் ரூ.3,500 அபராதம் விதித்தாா்.
அதேபோல் சாலையில் முகக்கவசங்கள் இல்லாமல் நடந்து வந்தவா்கள், இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடா்ந்து முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருக்கும் கடைகள் மீது அதிக அபராதம் விதிக்கப்படுவதோடு அக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என கோட்டாட்சியா் வித்யா தெரிவித்தாா்.
இதையடுத்து கரோனா பாதிப்பு காரணமாக 9 போ் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கள்ளங்கி தெரு மற்றும் பஜாா் தெருவில் தூய்மைப் பணி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று அவா் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கா் (பொறுப்பு), கிராம நிா்வாக அலுவலா் சுமதி மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் உடனிருந்தனா்.