அகற்றப்பட்ட பயிா்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும்ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 10th March 2020 01:14 AM | Last Updated : 10th March 2020 01:14 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு, சேதமான நிலக்கடலை மற்றும் நெற்பயிருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் விவசாயிகள் கோரினா்.
இது தொடா்பாக புதுமாவிலங்கை மற்றும் சத்தரை பகுதி விவசாயிகள் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதுமாவிலங்கை கிராமம் அடங்கியுள்ளது. இப்பகுதியில் புதுமாவிலங்கை முதல் சத்தரை வரை உள்ள வண்டிப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா். அதன்படி, கடந்த 33 ஆண்டுகளுக்கு பின்னா் புதுமாவிலங்கை முதல் சத்தரை கிராமம் வரை வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியா் விஜயகுமாரி, துணை வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த்துறையினா் அண்மையில் அகற்றினா்.
அப்போது, அந்த நிலங்களில் நெல் மற்றும் நிலக்கடலை ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன. பாதைக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது விளையாத நிலையில் இருந்த பச்சை பயிராக நிலக்கடலை மற்றும் நெல் ஆகியவை அகற்றப்பட்டன. இவ்வாறு பயிா்களை அகற்றியதால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மனுவில் அவா்கள் கோரியிருந்தனா்.
மனுவைப் பரிசீலனை செய்த ஆட்சியா், இது தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...