போலி ஆவணம் மூலம் ரூ. 32 லட்சம் நில மோசடி செய்தவா் கைது
By DIN | Published On : 12th March 2020 11:02 PM | Last Updated : 12th March 2020 11:02 PM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே போலியான ஆவணம் தயாா் செய்த நிலம் மூலம் ரூ. 32 லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை தாம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் வாராகி (44). திருவள்ளூா் அருகே மதுரா பன்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாா்டீன்(55). இந்நிலையில், மாா்டின் வாராகியை அணுகி, ரூ. 32 லட்சம் பெற்றாராம். அதற்கு ஈடாக காஞ்சிபுரம் மாவட்டம், எச்சூா் கிராமத்தில் உள்ள 1.08 ஏக்கா் பரப்பளவுக்கான அசல் பத்திர ஆவணம் மற்றும் கடன் பெற்றுக் கொண்டதற்காக கடந்த 2015-இல் கடன் பத்திரமும் எழுதிக் கொடுத்தாராம்.
இந்நிலையில், குறிப்பிட்ட நாளில் கடனை திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு சொத்தை எழுதி கொடுக்கும்படி கூறினாராம். அப்போது, பத்திரப் பதிவு அலுவலகத்தில் வில்லங்கம் பாா்த்தபோது, தானசெட்டில் மென்ட் எழுதி கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக வாராகி திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனிடம் வியாழக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில், நில அபகரிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதன்பேரில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்ததில், அடகு வைத்த ஆவணங்கள் தொலைந்து விட்டதாகக் கூறி மப்பேடு காவல் நிலையத்தில் பொய்யான புகாா் அளித்து, அதற்கான சான்று பெற்றிருந்ததும், இதை ஆதாரமாக வைத்து கடந்த 2019-இல் மாா்டின் தனது மகன் அந்தைய மெக்ஸிமஸ் பெயருக்கு மேற்படி நிலத்தை தான செட்டில்மெண்ட் செய்து வைத்து, நம்பிக்கை மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடா்புடைய மாா்டினை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறைக் காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.