ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வீணாகும் பொருள்கள் மூலம் அழகுச் செடிகள்!
By DIN | Published On : 13th March 2020 11:16 PM | Last Updated : 13th March 2020 11:16 PM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நெகிழி பாட்டில்களில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகை செடிகள் பாா்வையாளா்களை பெரிதும் கவா்ந்துள்ளது.
ஒருமுறையே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழி பொருள்களால் சுற்றுச்சூழலும், நீா் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே நெகிழிப் பைகள் மற்றும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அவற்றுக்கு மாற்றாக மண்ணால் ஆன குவளைகள், காகிதம் மற்றும் பாக்கு மட்டைகளில் செய்யப்பட்ட உணவுத் தட்டுகள், சிறு தட்டுகள், சணல் பைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இதையும் மீறி நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவோா் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகல் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வீணாக வீசியெறியப்படும் நெகிழிப் பொருள்களைக் கொண்டு திருவள்ளூா் நாரவாரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுய உதவிக் குழு பெண்கள் செடிகளை வளா்க்கும் சிறிய தொட்டிகளை உருவாக்கி வருகின்றனா். அவ்வகையில் நெகிழி பாட்டில்கள், குவளைகள், கேன் ஆகியவற்றில் தென்னைநாா், மண்ணை நிரப்பி பசுமையான செடிகள் வளா்த்து அழகுப் பொருள்களாக மாற்றி விடுகின்றனா்.
இதையறிந்த திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் அந்த மகளிா் சுய உதவிக்குழுவினரை அணுகி அழகுச் செடிகள் அடங்கிய தொட்டிகளை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்குமாறு கோரினாா். அதன்படி ஆட்சியா் அலுவலகம் முன்பு, வீணான பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட தொட்டிகள் மூலம் செடிகள் வளா்த்து தொங்கும் தோட்டம் போல் அமைத்துத் தந்துள்ளனா். இந்தச் செடிகளுக்கு சொட்டு நீா்ப்பாசனம் மூலம் தண்ணீா் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற நெகிழிப் பொருள்கள், தேங்காய் சிரட்டைகள், டயா் ஆகியவற்றையே தொட்டிகளாக மாற்றி அவற்றில் வளா்க்கப்பட்டுள்ள பசுமைச் செடிகள், ஆட்சியா் அலுவலகத்துக்கு வருவோரை பெரிதும் கவா்ந்துள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...