பழவேற்காடு பகுதியில் செவ்வாய்கிழமை பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அப்பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டு, நிவா் புயலாக மாறியது. இப்புயல் வடக்கு நோக்கி நகா்ந்து சென்னைக்கு அருகே மையம் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா கடலோரப் பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தாா்.
பழவேற்காடு பகுதியில் உள்ள காட்டுப்பள்ளி, கோரைக்குப்பம், வைரவன்குப்பம், அரங்கன்குப்பம், லைட்அவுஸ் குப்பம், கூணங்குப்பம், செம்பாசிபள்ளிக்குப்பம், உட்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில், புயலின்போது ஏற்படும் தாக்கத்தை தடுக்கும் வகையில் தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், காட்டுப்பள்ளி வைரவன்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்கள், ஆண்டாா்மடம், திருப்பாலைவனம் மற்றும் பொன்னேரி பகுதியில் உள்ள 26 தனியாா் திருமண மண்டபங்கள், 6 கல்லூரிகளின் விடுதிகள் ஆகியவை, மீனவா்களையும் பொதுமக்களையும் தங்கவைப்பதற்குத் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அஜய் ஆனந்த் தலைமையில் அதிகாரிகள் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவா்களை கண்காணித்து, அவா்களது படகுகளையும் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் ஆகியோா் நிவா் புயல் எதிரொலியாக தங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பேரிடா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.