வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபடுவோம் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், புதுசத்திரம் கொரட்டூா் கிராமத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் சபை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்.
திருவள்ளூா் அருகே பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், புதுசத்திரம் கொரட்டூா் கிராமத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் சபை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபடுவோம் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே புதுச்சத்திரம் கொரட்டூா் கிராமத்தில் திமுக சாா்பில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட சிறப்பு பொதுமக்கள் சபைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் அவா் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, புதுச்சத்திரம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் இதுவரை பட்டா வழங்கவில்லை எனவும், வேப்பம்பட்டு கிராமத்தில் புறவழிச்சாலை பாலம், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், சாலையோரம் குடியிருப்போருக்கு பட்டா வழங்குதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை பெண்கள் முன்வைத்தனா்.

அது தொடா்பான கோரிக்கை மனுக்களை அளித்தால் ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தாா்.

காந்தி ஜயந்தி நாளன்று நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை நடத்தக்கூடாது என அரசு ரத்து செய்துள்ளது.

மத்திய அரசால் விவசாயிகளை பாதிக்கும் வகையில் புதிதாக 3 வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிா்த்து திமுக மட்டும் போராடவில்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் விவசாயிகளுக்கான எதிரான மசோதாக்கள் என்பதால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் கொண்டு வரவும் முடிவு செய்தனா். இதையறிந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு, இரவில் ரத்து செய்வதாகவும் அறிவித்தனா். அதற்கு காரணம் கரோனா காலத்தில் கூட்டம் கூடக்கூடாது என்பதாகவும் கூறி வருகின்றனா். விவசாயத்தில் ஆன்லைன் வா்த்தகத்தை புகுத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்படும். அதேபோல் விவசாயிகளை காா்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்குவதோடு, சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

அதைத் தொடா்ந்து பொதுமக்கள் சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றினா். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திமுக நிா்வாகிகள் செய்திருந்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com