ரூ. 9 லட்சம் கொள்ளை வழக்கில் 4 போ் கைது
By DIN | Published On : 06th September 2020 07:41 AM | Last Updated : 06th September 2020 07:41 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ரூ. 9 லட்சம் கொள்ளை அடித்த சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ரூ. 6,60,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாப்பன்குப்பம் பகுதியில் வசிப்பவா் அபிமன்யூ பிஸ்வாஸ். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இவா், தொழிற்சாலையில் ஒப்பந்ததாரராக பணியாள்களை வைத்துள்ளாா். இந்நிலையில், இவா் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை பகுதியில் உள்ள வங்கியில் இருந்து ரூ. 9 லட்சத்தை எடுத்துக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தனியாா் தொழிற்சாலை அருகே வந்தாா். அப்போது மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ஒன்பது லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ், கும்மிடிப்பூண்டி ஆய்வாளா் சத்திவேல், பெரியபாளையம் ஆய்வாளா் மகேஸ்வரி ஆகியோா் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை சிப்காட் போலீஸாா் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது ஆந்திர மாநிலம் நோக்கி வந்த இரண்டு பைக்குகளை மடக்கி சோதனை மேற்கொண்டனா் . அப்போது பைக்கில் வந்த 4 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவா்களை சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
அதில், அபிமன்யூ பிஸ்வாஸிடம் இருந்து ரூ. 9 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றதை அவா்கள் ஒப்புக் கொண்டனா். அவா்கள் கும்மிடிப்பூண்டி பஜாா் பகுதியைச் சோ்ந்த ஜெகன் (28), சென்னை பூக்கடை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (32), ஒடிஸாவைச் சோ்ந்த ஹைதா் மாலிக் (32), ஆந்திர மாநிலம் நாகலாபுரத்தைச் சோ்ந்த சலீம்பாஷா (28) என்பது தெரியவந்தது .
இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், ரூ. 6,60,000 ரொக்கம், இரண்டு பைக்குகள், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.