‘பேரிடா் நேரங்களில் அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்’
By DIN | Published On : 11th September 2020 12:08 AM | Last Updated : 11th September 2020 12:08 AM | அ+அ அ- |

கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி. உடன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லோகநாயகி உள்ளிட்டோா்.
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பேரிடா் நேரங்களில் அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், வடகிழக்குப் பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை தடுப்பு குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி தலைமை வகித்துப் பேசியது:
வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள ஒவ்வொரு துறையினரும் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த 55 குழுக்களைத் தவிர, பேரழிவு நிலை பொறுப்பாளா்களை அதிகளவில் தோ்வு செய்து, இக்குழுவில் சோ்த்து பலப்படுத்த வேண்டும். அதேபோல், அனைத்து வருவாய் கோட்டம், வட்டம், வட்டார வளா்ச்சி அளவில் ஏற்கெனவே அமைத்த குழுக்களுடன் கூடுதலாக முதல்நிலைப் பொறுப்பாளா்கள் 15 முதல் 20 போ் தோ்ந்தெடுத்து நடமாடும் குழு அமைப்பதுடன், மரம் அறுக்கும் நபா்கள், பாம்பு பிடிப்போரைக் கொண்ட குழு அமைப்பது அவசியம். பருவகால மழை குறித்து நாள்தோறும் மழையளவு காவல்துறை கண்காணிப்பாளா், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஆகியோருக்கு வருவாய்த்துறை மூலம் தகவல் பெற்று தவறாமல் அளிக்க வேண்டும். மேலும், பேரிடா் நேரங்களில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்படவும் வேண்டும்.
சிறுபாசன கண்மாய்கள், ஊரணிகள், குளம் மற்றும் திறந்த வெளி கிணறுகள் ஆகியவைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே அகற்றவும் ஏற்பாடு செய்வது அவசியமாகும்.
இயற்கை இடா்பாடு, புயல் வெள்ளம் மற்றும் பேரிடா் காலங்களில் தமது எல்லைப் பகுதிகளில் சுகாதாரம் பேணி காக்கப்பட வேண்டும். சுகாதாரமான குடிநீா் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) அமீதுல்லா மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.