சைக்கிளில் பயணம்: திருவள்ளூர் காவல் நிலையங்களில் சைலேந்திர பாபு திடீர் ஆய்வு

சென்னையிலிருந்து சைக்கிளில் பயணம் செய்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு திருவள்ளூரில் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சைக்கிளில் பயணம்: திருவள்ளூர் காவல் நிலையங்களில் சைலேந்திர பாபு திடீர் ஆய்வு


திருவள்ளூர்: சென்னையிலிருந்து சைக்கிளில் பயணம் செய்த தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு திருவள்ளூரில் உள்ள தீயணைப்புத் துறை வீரர்களைச் சந்தித்து பேசியதோடு, காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு சென்னையிலிருந்து சைக்கிளில் பயணித்து திருவள்ளூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். அப்போது, சாலையோரம் உள்ள தீயணைப்பு நிலையத்தில் உள்ள வீரர்களைச் சந்தித்து உரையாடினார். 

அதைத் தொடர்ந்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது, அலமாரிகளில் கோப்புகள் சரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, முதல் தகவல் அறிக்கை உரிய விதிமுறைகளுடன் பதிவு செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக பதிவேடுகளை சோதனை மேற்கொண்டார்.

பின்னர் காவல் நிலையத்தில் உள்ள கணினி அறை, ஆய்வாளர் அறை, கைது செய்யப்படுவோர் பாதுகாப்பாக வைக்கும் அறை, ஆவணங்கள், ஆயுதங்கள் பாதுகாப்பு, காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒவ்வொரு காவலரின் பணிகள் குறித்த விவரம், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வழிப்பறி, செல்லிடப்பேசி பறிப்பு உள்பட குற்ற சம்பவங்கள் குறித்தும் காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் காவலர்களின் கோரிக்கைகளான பணியிட மாற்றம் மற்றும் குறைகள் தொடர்பாக விவரமாகக் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து காவலரின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று குடும்பத்தார்களைச் சந்தித்து வசதிகள் எப்படி உள்ளது, அதில் என்னென்ன குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது தொடர்பானவைகள் குறித்து காவலர்கள் குடும்பத்தினரிடம் விவரமாகக் கேட்டறிந்தார். 

பின்னர் அங்கிருந்த குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடியதோடு, என்ன படிக்கிறீர்கள் என்பதை கேட்டறிந்து, நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம் என்ற தான் எழுதிய புத்தகங்களையும் வழங்கினார். 

மேலும் காவலர்கள் குழந்தைகளின் சிலம்பாட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து ஊக்கப் பரிசும் அவர் வழங்கினார். 

பின்னர் அங்கிருந்து திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டியில் உள்ள நீர்த்தேக்கத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் யேசுதாஸ், மீனாட்சி, துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன், ஆயுதப் படை துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காவல் ஆய்வாளர்கள் நாகலிங்கம், ரவிக்குமார், சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com