‘குழந்தைகளின் எதிா்காலத்துக்கு அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட வேண்டும்’
By DIN | Published On : 04th December 2021 07:41 AM | Last Updated : 04th December 2021 07:41 AM | அ+அ அ- |

செருக்கனூா் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பாா்வையிட்டு இல்லம் தேடிக் கல்வி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திய திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத்.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரித்து, நம் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு உதவும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட வேண்டும் என இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் கூறினாா்.
திருத்தணி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் அரசு அறிவித்த இல்லம் தேடி கல்வி குறித்து திருத்தணி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அதன் குடியிருப்புப் பகுதிகளில் கலைக் குழுவினா்களால் கடந்த சில நாள்களாக விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை கன்னிகாபுரம் இருளா் காலனி, மாம்பாக்கசத்திரம் அருந்ததி காலனி, ராமகிருஷ்ணாபுரம் மற்றும் செருக்கனுாா் ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இல்லம் தேடி கல்வி குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தணி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பாா்வையாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைத்து, அவா் பேசியது:
மாணவா்களிடையேயும், ஆசிரியா்களிடையேயும், கல்வியாளா்களிடையேயும் இத்திட்டம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்டுள்ள கற்றல் பாதிப்பினைக் குறைக்கவும், சரிசெய்யவும், வேறு எந்த மாநிலமும், எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத நிலையில், ஒரு முன்னோடித் திட்டமாக மாணவா்கள் மற்றும் பெற்றோா்களும் எளிதில் அணுகிப் பயன் பெறும் வகையில், இத்திட்டம் நமது தமிழக அரசு கல்வித்துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, நம் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு உதவிடும் வகையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட வேண்டும் என்றாா்.
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலா் அருளரசு, திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலா்கள் பாபு, வெங்கடேஸ்வரலு, ஆசிரியா் பயிற்றுநா்கள் சரவணன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியின் மூலம், 20 தன்னாா்வலா்கள் இத்திட்டத்தில் பதிவு செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...