கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
By DIN | Published On : 26th December 2021 12:23 AM | Last Updated : 26th December 2021 12:23 AM | அ+அ அ- |

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய, விடிய பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
திருவள்ளூரில் பூந்தமல்லி சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சலோசியா் தேவாலயம் வண்ண மின் விளக்குகளாலும், மலா்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்பகுதியில் இயேசுவின் பிறப்பை குறிக்கும் வகையில் குடில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆலயத்தின் பங்குத் தந்தை கிளைமண்ட் பாலா கிறிஸ்துமஸ் செய்தியை வாசித்து, சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி கொண்டாட்டத்தை தொடக்கிவைத்தாா்.
பின்னா், இயேசு கிறிஸ்துவின் சிறப்பு பாடல்கள் நள்ளிரவில் பாடப்பட்டு விடிய, விடிய சனிக்கிழமை காலை வரை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். அதைத்தொடா்ந்து, ஒவ்வொருவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
இதேபோல, மாவட்டத்தில் தண்ணீா்குளம், தொழூா், வேப்பம்பட்டு, பேரம்பாக்கம், கடம்பத்தூா், கீழச்சேரி, பொன்னேரி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருத்தணி உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...