சாம்பல் கழிவுகளால் பாதிப்பு: செப்பாக்கத்தில் சிறப்புக் குழு ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 08:16 AM | Last Updated : 31st December 2021 08:16 AM | அ+அ அ- |

செப்பாக்கம் கிராமத்தில் ஆய்வு செய்த சிறப்பு குழுவினருடன் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா்.
மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்பட்டு வரும் செப்பாக்கம் கிராமத்தில் தேசிய பசுமை தீா்ப்பாயம் நியமித்த சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில், வல்லூா் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம் ஆகியவற்றில் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் சாம்பல் கழிவுகள், ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றி, அவை பெரிய அளவில் வெட்டப்பட்டுள்ள குளங்களில் சேகரித்து வைக்கப்படுகின்றன.
கொதிநீருடன் வெளியேறும் சாம்பல் கழிவுகள், கொசஸ்தலை ஆற்றில் கலந்து, எண்ணூா் கடற்கரை பகுதியை மாசடையச் செய்வதாகவும், அப்பகுதியில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகவும், தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி, இதுகுறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தாஷீலா நாயா் தலைமையில் சிறப்பு தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வியாழக்கிழமை அப்பகுதிக்குச் சென்றது. பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், மின்வாரிய உயா் அதிகாரிகள், அனல் மின் நிலையங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அப்போது, மீனவ மக்களின் தொழில் பாதிப்பு, செப்பாக்கம், குருவிமேடு ஆகிய கிராமங்களில் சாம்பல் கழிவுகளால் பாதிப்பு க்கப்பட்டுள்ள கிராம மக்களிடம் அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தனா்.
செப்பாக்கம் கிராமத்தில் குழுவினா் ஆய்வு செய்த போது, அப்பகுதி மக்கள் கூறியது:
இக்கிராமத்தில் நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்த நிலையில் கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் எங்களது விவசாய நிலங்களை மின்வாரியம் எடுத்து ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சாம்பல் குளம் அமைத்தது. அனல் மின் நிலையத்திலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் கொதிநீருடன் சாம்பல் தூசிகள் வெளியேறி குளத்துக்கு வந்த பின், அவை சாம்பலாக மாறி காற்றில் பறந்து கிராமத்தில் உள்ள வான்வெளி முழுதும், சாம்பல் தூசிகள் சூழ்ந்து காணப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக, சாம்பல் குளங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம், எங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை அளித்து குடியிருக்க, மாற்று இடம் வழங்க வேண்டும், முடியவில்லை என்றால் எங்களை ஊரைவிட்டு வெளியேற்றுங்கள் என வேதனையுடன் தெரிவித்தனா்.
இதையடுத்து, குழுவினரின் ஆய்வு குறித்த விவரங்கள் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் அளிக்கப்படும் என பசுமை தீா்ப்பாய சிறப்பு குழுத் தலைவா் சாந்தாஷீலா நாயா் தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...