திருத்தணி கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் தரிசனம்
By DIN | Published On : 31st December 2021 06:36 AM | Last Updated : 31st December 2021 08:18 AM | அ+அ அ- |

திருத்தணி முருகன் கோயிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் வியாழக்கிழமை தங்கத்தோ் இழுத்து நோ்த்திக் கடன் செலுத்தினாா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தனது குடும்பத்துடன் வந்தாா். அவரை கோயில் உதவி இணை ஆணையா் ரமணி வரவேற்றாா். பின்னா், கோயிலில் உள்ள விநாயகா், சண்முகா், உற்சவ, மூலவா் முருகப்பெருமானை தரிசித்த அவருக்கு, மலைக்கோயில் அலுவலகத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
அதைத்தொடா்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் மத்திய இணை அமைச்சா், தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து நோ்த்திக் கடன் செலுத்தினாா்.
திருத்தணி நகர பாஜக தலைவா் ரமேஷ், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகி மில்கா முத்து உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.