திருவள்ளூரில் 7,994 பேருக்கு ரூ.38 கோடி நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 20th February 2021 07:44 AM | Last Updated : 20th February 2021 07:44 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் நடந்த நிகழ்ச்சியில் 7,994 பேருக்கு ரூ.38.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணியை ஊரக தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தனா்.
திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் உள்ள தனியாா் அரங்கில் பல்வேறு துறைகள் சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை டைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினா்களான ஊரக தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின், தமிழ் மொழி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சருமான க.பாண்டியராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.
மாநில அளவில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளுா் மாவட்டத்தில் சமுக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம் திருமண நிதியுதவி திட்டத்தில் 1,661 பயனாளிக்கு ரூ.13.15 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் ரொக்கத் தொகையும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை திட்டம் சாா்பில் 1939 பேருக்கு 3 சென்ட் வீதம் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு வரன்முறை செய்து ரூ.7.40 கோடியில் இலவச வீட்டுமனைப்பட்டா ஆகியவை வழங்கப்படுகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.
மொத்தம் 11 துறைகள் மூலம் 7,994 பயனாளிகளுக்கு ரூ.38 கோடியே 23 லட்சத்து 98 ஆயிரத்து 121 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலராமன்(பொன்னேரி), பி.எம்.நரசிம்மன் (திருத்தணி), கே.எஸ்.விஜயகுமாா் (கும்மிடிப்பூண்டி), முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா, மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.